நன்னூல் என்றால் சங்க கால இலக்கிய நன்னூல் மட்டுமல்ல. எந்த ஒரு நல்ல நூல் அல்லது புத்தகமுமே நன்னூல்தான். அதற்கென்று ஏதாவது இலக்கணம் உண்டா?
இந்த கேள்விகள் எல்லா வாசகர்களுக்கும் உண்டாவதுதான். வாசகர்கள் என்றால் இக்காலத்தில் வாரா
வாரம் அல்லது மாதா மாதம் வெளிவரும் வாராந்திர இதழ்களைப் படிப்பவர்கள் மட்டும்தானா,
இல்லை, எந்த ஒரு புத்தகத்தை வாசிப்பவரும் வாசகர்தானா?
இந்தக் கேள்விகள் என் மனத்தில் அடிக்கடி எழும் பல கேள்விகளில் ஒன்று.
சற்றே உள்ளே யோசித்துப்பார்த்தால் படிக்கக் கூடிய எதையும் படிக்கும் அல்லது வாசிக்கும் படிக்கத் தெரிந்த அனைவருமே வாசகர்கள்தான் என்று தோன்றுகிறது. தெருவோர டீக்கடையில் பஜ்ஜி சாப்பிட்டு விட்டு பொழுது போகாமல் அந்த பஜ்ஜி சூடு தாங்க சுற்றித் தரும் காகித்தைக் கூட விடாமல் நான் வரி வரியாக படித்ததும் நினைவில் தோன்றுகிறது. எனவே இதுதான் அல்லது அதுதான் என்றில்லாமல் எதையும் வாசிக்கிற அனைவருமே வாசகர்கள்தானே. எனவே (குமுதம் பாஷையில் சொல்வதானால்) நீங்களும் ஹலோ வாசகாஸ்தான், அல்லது வாசு(ச)கிதான்.
சரி வாசகனை define செய்தாகி விட்டது. இனிமே வாசகத்தை அல்லது வாசிப்பதை define செய்ய வேண்டுமே. அதற்கும் ஓரளவு மேலே விளக்கம் உள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். வாசிக்கக் கூடிய அல்லது வாசிக்க முடிந்த எதுவுமே வாசகம் அதாவது புத்தகம்தான். வாசகம் என்பது பொதுவாக வாக்கியம் என்ற பொருளிலேயே தமிழில் பயன்படுத்தப்படுவதால், நானும் இனிமேல் படிக்கக் கூடிய அல்லது படிக்க வேண்டிய கருவியை (கண் கண்ணாடி அல்ல) புத்தகம் என்ற சொல்லாலேயே குறிப்பிடுகிறேன்.
நல்ல நூல் அல்லது புத்தகம் என்றால் என்ன? கிழியாமல் அட்டை போட்டு புதிதாக வைத்திருந்தால்
அது நல்ல புத்தகம் ஆகி விடுமா? நல்ல புத்தகம் என்றால் படிப்பவனை
படித்து முடித்தவுடன் நல்லவனாக்கினால் அது நல்ல புத்தகமா? பல
மதம் சார்ந்த புத்தகங்கள் இந்த உணர்வை தருகின்றனவா என்றால் இல்லையே? சொல்லப்போனால், பெரும்பாலான இத்தகு புத்தகங்கள் எழுதியவரின்
மனோ நிலைக்கு நம்மை இட்டுச் செல்கின்றனவே தவிர படிக்கின்றவரை சிந்திக்கத் தூண்டுகின்றனவா
என்றால் இல்லை என்றுதான் பதில் சொல்ல வேண்டும். அவரது சித்தாந்தங்களை
நமக்குள் திணிக்கும் புத்தகங்கள்தான் இங்கு நிறைய உண்டு. இவற்றுள்
திருக்குறள் போன்ற மிகச் சில வைரங்கள் தவிர மார்க்ஸ், எங்கல்ஸ்
போன்ற பல சித்தாந்திகள், வேதாந்திகளின் புத்தகங்களை படித்தால்
அவை அவர்களின் வழியில் நம்மை இட்டுச் செல்லுமே தவிர நம்மை நம் வழியில் சிந்திக்க உதவுகிறதா
என்பது கேள்விக் குறிதான்.
அது மட்டுமில்லை, அட இது சரிதானே என்றும் ஒரு எண்ணத்தை தோற்றுவித்து மேலும் அவரது அல்லது அது
போன்ற புத்தகங்களை நாடிச் செல்லவும் அவை தூண்டுகின்றன என்பதும் மிகையல்ல. சொல்லப் போனால், போதை வசப்பட்ட ஒருவனின் மனோ நிலைதான் இத்தகு புத்தகங்களை படிப்பவனின்
மனோ நிலை. இதனால், இது போன்ற புத்தகங்களை
படிப்பது தவறா என்றால் இல்லை என்பதுதான் எனது திடமான பதில்.
இன்றைய சூழலில் பெரும்பாலான புத்தகங்கள் இணைய தளத்தில் PDF அல்லது E-Book வடிவத்தில்
கிடைக்கின்றன. மாதாந்திர சந்தா மூலம் உலகத்தில் உள்ள பெரும்பான்மை
புத்தகங்களை நமது மொபைல் அல்லது கம்ப்யூட்டருக்கு கொண்டு வரும் Magzter போன்ற மென்பொருள்களும் இருப்பதால், புத்தகங்களை வெள்ளமாக
எதிர்கொள்ளும் ஒரு நிலைமை இருப்பதால், எதை படிப்பது எதை விடுவது
என்று தெரியாமல் எனக்கும் படிக்கும் பழக்கம் உள்ளது என்று சொல்லிக் கொள்வதற்காக ஏதோ
ஒன்றை படிக்கும் மனநிலையும் அதிகரித்து வருகிறது.
இந்த இடத்தில் சிகரெட் பெட்டிகளில் வருவது போன்ற ஒரு சட்டபூர்வ எச்சரிக்கை அதாவது Statutory Warning கொடுத்து விடுகிறேன். நான் இது வரை உரக்க சிந்தித்தது பொது.
ஆனால் இதற்கு கீழே வருவது எனது அனுபவம் அல்லது உணர்வு. இது உங்களுக்கு ஒத்து வருமா அல்லது
நீங்கள் அதை ஒத்துக் கொள்வீர்களா என்பது எனக்குத் தெரியாது. எனவே,
சற்றே எச்சரிக்கை உணர்வுடனே தொடரும்படி கேட்டுக் கொள்கிறேன். இங்கு நான் உதாரணமாக காட்டியிருக்கும்
புத்தகம் கூட ஒரு குறியீடுதானே தவிர, அந்த புத்தகத்தால்தான் அப்படிப்
பட்ட அனுபவம் வரும் என நான் சொல்ல வரவில்லை. (குழப்பியது போதுமா?)
இன்று ஸ்ரீ ராகவேந்திரர் பற்றிய ஒரு புத்தகத்தை படித்துக் கொண்டிருக்கும் போதே
என் மனதில் இந்த கேள்விகள் அவ்வப்போது வந்து போயின. அந்த புத்தகத்தின் முதல்
பாகத்தை படித்து முடித்தவுடன் இதற்கான விடை எனக்கு அந்த புத்தகத்திலேயே அதாவது அந்த
புத்தகத்தை படிக்கின்ற அனுபவத்திலேயே கிடைத்தது.
ராகவேந்திர ஸ்வாமிகளின் கதை நான் முன்பே படித்த ஒன்றுதான். ரஜினிகாந்த் நடித்த ஸ்ரீ ராகவேந்திரர் திரைப்படமும்
நான் பார்த்திருக்கிறேன். எனவே அந்த புத்தகத்தை படிக்கும் போது அடுத்து என்ன என்று ஒரு பெரிய ஆர்வம்
எதுவும் உண்டாகவில்லை. நம்மில் பலருக்கும் ராமாயணம்
அல்லது மஹாபாரதம் புத்தகத்தை (அது யாருடைய
உரையாக இருந்தாலும்) மீண்டும் படிக்கும் போது உண்டாகும் ஒரு உணர்வுதான்.
இன்னும் சொல்லப் போனால் முடிந்து போன அல்லது முடிவு தெரிந்து போன ஒரு
கிரிக்கெட் மேட்சை மறுநாள் ஹைலைட்டாக பார்க்கும் போது ஏற்படும் ஒரு உணர்வுதான்.
ஆனால் ஒவ்வொரு பக்கத்தை படிக்கும் போதும் ஒருவிதமான இனம் புரியாத ஒரு அயர்வு இருந்ததென்னவோ
உண்மை. ராகவேந்திர ஸ்வாமிகளின்
தந்தை பட்ட பாடுகள், அவரது சித்தாந்த குருவான வாதிராஜ ஸ்வாமிகளின்
வரலாறு, பிரஹலாதன் வரலாறு போன்றவையும் வேறொரு தளத்தில்,
அதாவது, மனத்தளத்தில் விவரிக்கப்பட்டிருந்ததால்
அந்த உணர்வுகளை உள்வாங்கியதாலும், அக்கால நிகழ்வுகளை இன்றைய காலகட்டத்தில்
அவ்வப்போது ஒப்பிட்டுப் பார்த்துக் கொண்டே படித்ததாலும் வந்த அயர்வு அது. ஆசிரியர் எங்குமே தனது கருத்தை தான் சொல்லாமல், கதையின்
போக்கிலேயே எழுதி இருந்தார். அதனால் என்னால், அந்த புத்தகத்தை எழுதியவருடைய தளத்தில்
இல்லாமல் என் தளத்தில் இருந்து என்னால் படிக்க முடிந்தது, அவ்வப்போது
எட்டிப்பார்த்த கண்ணீர் உள்பட.
படிக்கும் போது சில குறுக்கீடுகள் வந்தால் கூட என்னால் அதை தொல்லையாக நினைக்காமல், பொறுமையாக முடித்து விட்டு விட்ட இடத்தில் இருந்து
தொடர முடிந்தது. படித்து
முடித்த போது அடடா முடிந்து விட்டதே என்ற ஆதங்கமோ அல்லது அப்பாடா முடிந்து விட்டது
என்ற நிம்மதியோ இல்லை. ஆனால் ஒரு புத்தகம் படித்து முடித்த ஒரு திருப்தி இருந்த்து. அதே நேரத்தில் என்னை எந்த ஒரு முடிவுக்கு
இட்டுச் செல்லாமல், அடுத்த பாகம் எங்கே என்ற தேடலும் இல்லாத ஒரு
நிலையை உணர்ந்தேன்.
திருக்குறள் படிக்கும் போது கூட இது போன்றே இருக்கும். பல
சுய முன்னேற்ற நூல்கள் கூட அப்படித்தான். ஒவ்வோர் அத்தியாயமும்
தனியாக தொடர்பின்றி இருக்கும். ஆனால், ஒவ்வொரு
அத்தியாயமும் ஒரு தனிக் கதை சொல்லும் அல்லது தனி உணர்வு தரும். அப்படிப்பட்ட புத்தகங்களை படித்து
முடித்தபின்னர் உங்களுக்குள்ளேயே ஒரு சூன்யம் அல்லது வெறுமை போன்ற உணர்வின்றி,
ஒரு value addition கிடைத்த ஒரு சுகம் கூட இருக்கலாம்.
வெகு நேரம் நடைப்பயிற்சி அல்லது உடற்பயிற்சி செய்து முடித்தவர்களுக்கு
இருப்பது போன்ற ஒரு உணர்வுதான் இது.
அந்த புத்தகத்தின் முதல் பாகத்தை படித்து முடித்தவுடன் எனக்குள்ளே தோன்றிய கேள்விதான் இந்த கட்டுரையின் தலைப்பு. இப்போது அதற்கான விடை கிடைத்தது போன்ற ஒரு உணர்வு. நீங்கள் இதைப் படித்து முடிக்கும் போது உங்களுக்கும் அந்த உணர்வு தோன்றுமா என்பது எனக்குத் தெரியவில்லை. ஏனென்றால், நான் குறிப்பிட்ட அந்த புத்தகத்தை நீங்கள் படிக்கவில்லை அல்லவா?
இப்போது எளிமைக்காக, மேலே நான் உணர்ந்தவற்றை மனதில் இருத்தி, concise ஆக என் மனதில் பட்ட இலக்கணத்தை சொல்லி விடுகிறேன். நான் சொல்லும் இந்த சுருக்கம் உங்களுக்கு பிடிக்க வேண்டுமென்றோ அல்லது நீங்கள் நான் சொல்வதை ஒத்துக் கொள்ள வேண்டுமேன்றோ அவசியமில்லை.
நல்ல நூல் அல்லது புத்தகம் என்பது படிக்கும் போது உங்களை உங்கள் தளத்திலேயே
வைத்திருக்க வேண்டும், எழுதுபவரின் தளத்தில் அல்ல, அது வியாபார தந்திரம். படித்து முடிக்கும் போது மகிழ்வு, கோபம் அல்லது எரிச்சல் ஏதும் உண்டாக்காமல், ஒரு அயர்வைத்
தர வேண்டும், அதாவது நான் உண்மையிலேயே படித்து முடித்து விட்டேனா
என்ன என்பது போன்ற கேள்வி உண்டாக வேண்டும். உங்களுக்கு தெரியாத ஒரு பொருள் உங்களுக்கு
அந்த புத்தகத்தை படித்த பின் உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டும் அல்லது புரிந்திருக்க
வேண்டும், இது மிகக் கட்டாயமில்லை என்றாலும் கூட. படிக்கும் போது அடுத்து என்ன,
அடுத்த்து என்ன என்ற ஒரு ஆர்வத்தை உண்டாக்காமல் இருக்க வேண்டும்.
இதுவும் தொலைக்காட்சிகளில் வரும் நெடுந்தொடர்கள் போன்ற ஒரு வியாபார தந்திரம்தான். உங்களைக் கட்டிப் போடாமல் முழுமையாக
ஆட்கொள்ளாமல், உங்கள் போக்கிலேயே அதைப் படிக்கும் சுதந்திரத்தை அந்த புத்தகம் உங்களுக்கு தர வேண்டும்.
இன்னும் ரத்தினச் சுருக்கமாக சொல்வதானால், ஒரு மாலை நேரத்தில், மழை லேசாக சாரல் போடும் நேரத்தில், ஜன்னல் ஓரம் உட்கார்ந்து கொண்டு கையில் சூடாக காப்பி அல்லது டீக் கோப்பையை வைத்துக் கொண்டு, ஐபாட் அல்லது மொபைலில் இளையராஜாவின் இசையில் வந்த ஒரு பாடலைக் கேட்கும் போது வருமே ஒரு உணர்வு அது போல இருக்க வேண்டும்.
இவையெல்லாம், ஒரு
angle மட்டுமே. உங்களுக்கு மேலும் பல கோணங்கள்
தோன்றலாம். ஒரு நல்ல நூல் படித்து விட்டு என்னுடன் பகிர்ந்து
கொள்ளுங்களேன்.
No comments:
Post a Comment